கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் நேற்று அழகியமண்டபம் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போவை நிறுத்த முயன்றனர். ஆனால் டெம்போ நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அதிகாரிகள் டெம்போவை பின்தொடர்ந்து சென்று சாமியார்மடம் சந்திப்பு பகுதியில் வைத்து வழிமறித்தனர். பின்னர் டெம்போவை சோதனை செய்தபோது அதில் மூன்று டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் சென்று கள்ளச் சந்தை மூலமாக அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும் சிமெண்ட் கொண்டு செல்வது போன்று போலியாக பில் தயார் செய்து ரேஷன் கடத்திச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடையார் விளையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வாணிபக் கழக கிட்டங்கியிலும், டெம்போவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.