காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது, பெரும்பாலான மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும். காலி மது பாட்டிலை அதே கடையில் மீண்டும் கொடுக்கும் போது அந்த ரூ.10 திருப்பி தரப்படும். சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, டாஸ்மாக் பணியாளர்களைக் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தை செயல்படுத்த தனியாக பணியாளர்களை நியமிப்பதாகவும், அதற்கு பின் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அப்போது இருந்த அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்நிலையில், தற்போது காலி மது பாட்டில் திட்டத்தை கடைப் பணியாளர்கள் மூலமே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறி, சென்னை மண்டலம் மற்றும் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்கள் டாஸ்மாக் தலைமையகம் முன்பும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் மணிகண்டன் கூறியதாவது: இந்த திட்டத்தை செயல்படுத்த தனியாக பணியாளர்களை நியமிப்பதாக கடந்த அரசு எங்களுக்கு உறுதி அளித்தது.
ஆனால், தற்போது மீண்டும் எங்களைக் கொண்டே இந்த திட்டத்தை செயல்படுத்த நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த திட்டத்துக்கென தனியாக பணியாளர்களை நியமிக்க வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
தற்போது, இந்த திட்டம் அமலில் உள்ள மாவட்டங்களில் இந்த மாற்றத்தை கொண்டு வருவதாக உறுதி அளித்தனர். அதுவும் செயல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் எங்களை அழைத்து பேசியுள்ளார். புதிய அரசு அமைந்துள்ளதால், கால அவகாசம் கோரியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பணியாளர்களுக்கு சாதமாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் உறுதி அளித்தார். மேலாண் இயக்குநரின் உறுதியை தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை தற்போதைக்கு வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.















