இந்தியன் ஆயில் நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

0
207

டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தைக் கண்டித்து நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிறுவனங்கள் தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இங்கு டேங்கர் லாரிகள் செல்வதற்கான சாலைகுண்டும், குழியுமாக உள்ளது.மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் மாற்று வழியில் லாரிகளை இயக்கிசென்றால் அதிக கிலோ மீட்டர்தூரம் ஆகிறது. அதற்குண்டான டீசல் பணம் தருவதில்லை.

சிறு பிரச்சினைகளுக்குக் கூட இந்தியன் ஆயில் நிறுவனம் எங்கள் லாரிகள் மீதான ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது. இதனால், கடந்த 8 மாதங்களாக வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்களது பிரச்சினைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு காணவில்லை என்றால், வரும் 26-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களில் செயல்படும் டேங்கர் லாரிகளை ஒருங்கிணைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.