பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயலாற்றும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகம் எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாக களப்பணியாற்றி, மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021-ம் ஆண்டு கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்களுடன் கண்கலங்கியபடி பேசிய பழைய காணொளி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
“நான் வென்று சட்டப்பேரவைக்குள் செல்லவேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை. நாட்டை வெல்லாமல், ஒரு சில சீட்டுகளை வெல்வதில் ஒன்றும் ஆக போவதில்லை. ஆனாலும் வென்று உள்ளே போயிருக்கலாம். மக்களின் குரலாக ஒலித்திருக்கலாம்.
இது நம் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி.” என்று அதில் சீமான் பேசியிருப்பது தற்போது நெட்டிசன்களிடையே பேசும் பொருளாகி இருக்கிறது.














