தமிழக பட்ஜெட்டில் பொதுமக்களின் நலன்கள் முற்றிலுமாக புறக்கணிப்பு: எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு

0
49

நிறைவேற்றவே முடியாத அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டில், மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக் கடன் ரத்து, காஸ் சிலிண்டர் மானியம், 100 நாள் வேலைத்திட்ட ஊதிய உயர்வு போன்ற திமுகவின் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது மட்டும்தான் அதிகரித்து வருகிறது.

பல அறிவிப்புகள் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள்தான். சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, அதிமுக ஆட்சியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்த நிலையில், இதுவரை 3,500 பேருந்துகள்தான் வாங்கியுள்ளனர். தற்போது ரூ.3 ஆயிரம் கோடியில் புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்துள்ளனர். இவையெல்லாம் வெற்று அறிவிப்புகள்தான்.

திமுக தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றனர். இதுவரை 57,000 பணியிடங்களை மட்டுமே நிரப்பியுள்ளனர். தற்போது 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப் போவதாக அறிவித்துள்ளனர். இது சாத்தியமற்றது. திமுக பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகளை நிறைவேற்றவே முடியாது. கடந்த 4 ஆண்டுகள் எதுவும் செய்யாமல், 2026 தேர்தலை முன்னிட்டு மக்களைக் கவர்வதற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். விளம்பரத்துக்காக மட்டுமே தாக்கல் செய்தள்ள இந்த பட்ஜெட்டை மக்கள் நம்ம மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: மடிக்கணினி திட்டம் இளம் வாக்காளர்களை கவர்வதற்கான திட்டமாகும். தொழில் பூங்காக்கள், தொழிற்பேட்டைகளை எப்போது அமைப்பார்கள்? அரசுத் துறைகளில் ஓராண்டில் 40,000 பணியிடங்களை எப்படி நிரப்ப முடியும்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கிழக்கு கடற்கரை சாலை தொடர்பான திட்டங்கள் அனைத்திலும், திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏற்கெனவே தடம் பதித்திருப்பதைத் தற்செயலாக எடுத்துக்கொள்ள முடியாது. குஜராத் அரசு உட்கட்டமைப்புக்கு ரூ.95,472 கோடி செலவிடும் நிலையில், தமிழகம் ரூ.57,231 கோடி மட்டுமே செலவிடுகிறது. தமிழகத்தின் கடன் ரூ.9.62 லட்சம் கோடியாகும். நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மத்திய அரசு மீது பழிபோட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது சமூகநீதிக்கு இழைத்திருக்கும் துரோகம். கல்வித் துறைக்கு போதிய நிதி ஒதுக்காமல், தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? அரசு ஊழியர்களையும் திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சாதிவாரி கணக்கெடுப்பு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், நதிநீர் இணைப்பு, நீராதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு என எதுவுமே இல்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை பட்ஜெட் வெளிப்படுத்தியிருக்கிறது. மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை.

தவெக தலைவர் விஜய்: தமிழக மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக, திமுக இரண்டுமே ஒரே மனநிலை கொண்ட கட்சிகள்தான். பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கும் அறிவிப்பு இல்லை.

வி.கே.சசிகலா: வெற்று அறிவிப்புகளுடன் கூடிய, மக்களை ஏமாற்றும் பட்ஜெட். பயன்தரக்கூடிய எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here