கட்​சிகளின் பேரணி, கூட்​டங்​களுக்கு குறிப்பிட்ட தொகையை கட்​ட​ண​மாக வசூலிக்க போலீஸுக்கு நீதிபதி அறி​வுறுத்​தல்

0
58

அரசியல் கட்சிகளின் அன்றாட பேரணி, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸாரின் வேலை அல்ல என்றும், இனி வரும் நாட்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நாளை (மார்ச் 16) சீமான் தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அக்கட்சி நிர்வாகி சசிக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் திருவிழாவை காரணம் காட்டி போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அமைதியான முறையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘‘திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தற்போது மாசி பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பர் என்ற எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலை கருத்தில்கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது. பேரணி வழித்தடத்தை மாற்றினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், ‘‘இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் 400 பேர் முதல் 500 பேர் வரை பங்கேற்பர். அமைதியான முறையில் இந்த பேரணி நடத்தப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘திருப்போரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (மார்ச் 16) நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு குறிப்பிட்ட இடத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க வேண்டும். மேலும் போலீஸார் பாதுகாப்பு வழங்க ரூ. 25 ஆயிரத்தை கட்டணமாக நாம் தமிழர் கட்சி செலுத்த வேண்டும்’’ என்றார்.

அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பி்ல் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ரூ. 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பதை உத்தரவில் இருந்து நீக்கினார். பின்னர் நீதிபதி, ‘‘பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், சட்டம் – ஒழுங்கை கட்டிக்காக்கவும் பணியமர்த்தப்பட்டுள்ள போலீஸார், இதுபோன்ற அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்கும் பாதுகாப்பு அளிக்க நேரிடுவதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இதுபோல நடத்தும் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற அன்றாட நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போலீஸாரின் வேலை அல்ல. மக்களின் வரிப்பணத்தில் தான் காவல்துறை பம்பரமாக சுழன்று இயங்கி வருகிறது.

அந்த வரிப்பணத்தை வீணடிக்கக்கூடாது. எனவே, அரசியல் கட்சியினர் இதுபோல நடத்தும் நிகழ்வுகளில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸார் பணியமர்த்தப்பட்டால் குறிப்பி்ட்ட தொகையை அக்கட்சியினரிடம் இருந்து கட்டணமாக போலீஸார் வசூலிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here