தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னை தொழில், வர்த்தக சபை தலைவர் ராம்குமார் சங்கர்: தமிழக அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் சர்வதேச நகரம், ரூ.3,500 கோடியில் குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டம், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் முதலீடுகளை ஈர்ப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பொருளாதார வளர்ச்சி, சமூகநலத் திட்டங்களில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) தென்மண்டலத் தலைவர் டாக்டர் நந்தினி: தமிழக அரசின் பட்ஜெட், பொருளாதாரம், சமூகநலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது. ரூ.350 கோடி முதலீட்டில் சென்னை குடிநீர் திட்டம், ரூ.3,500 கோடியில் வீடுகள் கட்டும் திட்டம், பெண்கள் பெயரில் செய்யும் பத்திரப் பதிவுக்கு முத்திரைத் தாள் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு ஆகியவை பெரிதும் வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் (டான்ஸ்டியா) தலைவர் சி.கே.மோகன்: தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டுக் கழகம் மூலம் 9 இடங்களில் புதிய தொழில்பேட்டைகள், அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம், திருமங்கலம், ஒத்தக்கடை இடையே மெட்ரோ ரயில் திட்டம், ஒரகடம்-செய்யாறு தொழில்வழித் தடத்துக்கு நிதி ஒதுக்கீடு, தூத்துக்குடியில் சிந்தெடிக் ஃபைபர் மற்றும் தொழில்நுட்ப பூங்கா நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், தொழில் நிறுவனங்களுக்கான சூரிய மின்சக்திக்கான மானியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் காலக் கடனுக்கு (டேர்ம் லோன்) வட்டி மானியம் அறிவிக்கப்படவில்லை.