வரும் 9-ம் தேதி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது.
“மற்ற எல்லா போட்டிகளை விடவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. இந்தப் போட்டி வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் வித்தியாசமான வைப் மற்றும் உற்சாகமூட்டும் உணர்வை தரும். உலகில் எங்கு சென்றாலும் இது இருக்கும். அவரவர் தங்கள் அணியை ஆதரிப்பார்கள்.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மீது அதீத கவனம் வைப்பார்கள். இந்த போட்டி சார்ந்து இது மாதிரியான எதிர்பார்ப்பு நிச்சயம் பதட்டத்தை ஏற்படுத்தும். ஆனால், அதை எப்படி கையாளுகிறோம் மற்றும் ஆட்டம் சார்ந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவது போதுமானது. இந்த ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும். அந்த சூழலில் அமைதியாக இருந்து, நமது கடின உழைப்பின் மீதும், ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே” என பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டி நியூயார்க் நகரின் நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் நடைபெற உள்ளது. கடந்த 2012-13க்கு பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.
அதனால் இந்தியா – பாகிஸ்தான் நேரடியாக பலப்பரீட்சை செய்யும் போட்டி பரவலானவர்கள் மத்தியில் கவனம் பெறுவது வழக்கம். கடைசியாக கடந்த ஆண்டு அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.