டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் டி பிரிவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
தென் ஆப்பிரிக்க அணியானது கேப்டன் எய்டன் மார்கிரம் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியானது ஹெய்ன்ரிச் கிளாசன், குயிண்டன் டி காக், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரீசா ஹென்றிக்ஸ், மார்கோ யான்சன் என பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.
அதேபோல் பந்துவீச்சில் லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், அன்ரிச் நோர்க்கியா, தபரைஸ் ஷம்சி என வலுவான தாக்குதல் வரிசையை பெற்றுள்ளது. இவர்கள் நிச்சயம் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடும். அதே நேரத்தில் இலங்கை அணியும் பனுகா ராஜபக்ச, சரித் அசலங்கா, ஜனித் லியனாகே, கமிந்து மெண்டிஸ், பதும் நிசங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசன் ஷனகா என சிறப்பான பேட்டிங் வரிசையுடன் களம் காண்கிறது.
பந்துவீச்சில் தில்ஷன் மதுஷனகா, அசிதா பெர்னான்டோ, மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா, நுவான் துஷாரா, துனித் வெல்லாலகே ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறனை எதிர்பார்க்கலாம்.
நமீபியா – ஓமன் மோதல்: முன்னதாக காலை 6 மணிக்கு நடைபெறும் போட்டியில் நமீபியா, ஓமன் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியானது பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.