நார்வே செஸ் தொடரில் சாதனை: பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து

0
174

நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்’ வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.

டாப்-10 தரவரிசைக்குள் நுழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிரக்ஞானந்தா. ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது.

அமைச்சர் உதயநிதி: நார்வே செஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய நிலையில், பேபியானோ கருணாவையும் வீழ்த்தி, டாப் 10-க்குள் வந்துள்ளதற்கு வாழ்த்துக்கள். உங்களது வெற்றியால் நாங்கள் பெருமையடைகிறோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உலகின் நம்பர் -1 வீரர் மாக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக வெற்றி பெற்றதுடன், கருணாவையும் வீழ்த்தி, உலகின் டாப்10 வரிசையில் இடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள். சென்னையின் சாம்பியன் இந்தியாவை தொடர்ந்து பெருமையடைய செய்ய வேணடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here