தீபாவளி விற்பனையில் செயற்கை இழை ஜவுளி ரகங்கள் ஆதிக்கம்: எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு குறையும் என தகவல்

0
46

 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மொத்த ஜவுளிப் பொருட்கள் விற்பனையில் பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான அறிகுறி இது என்று தொழில் துறையினர் தெரிவித்தனர்.

பருத்தியை மூலப் பொருளாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளிச் சங்கிலித் தொடரில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. பருத்தி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களைவிட, செயற்கை இழை கலந்து தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்களுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. மேலும், அவை துணியின் ஆயுளை அதிகரிக்கவும், சுருக்கத்தை குறைத்து மேம்படுத்தவும் உதவுகின்றன. இதனால் சமீபகாலமாக ஜவுளிப் பொருட்கள் உற்பத்தியில் பருத்திக்கு மாற்றாக பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசாம் கூறும்போது, “செயற்கை இழையால் தயாரிக்கப்படும் ஜவுளிப் பொருட்கள், இந்திய சந்தைகளில் அதிக அளவு விற்பனை செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. பருத்திக்கு நிகராக சந்தையில் செயற்கை இழைகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. எதிர்காலத்தில் செயற்கை இழை ஜவுளிப் பொருட்கள் துறை சிறப்பான வளர்ச்சி பெறும்” என்றார்.

சாஸ்தா தொழில்நுட்ப ஜவுளித் தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ராஜா கூறும்போது, “தீபாவளிக்கு விற்பனை செய்யப்பட்ட ஜவுளிப் பொருட்களில் பெரும்பாலானவை செயற்கை இழை கலப்பு கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். எதிர்காலத்தில் பருத்தி பயன்பாடு முற்றிலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் கூறும்போது, “புதுமையான வகையில் தயாரிக்கப்படும் செயற்கை இழை ஜவுளிப் பொருட்கள், விற்பனையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. மேலும், பருத்தி ஆடைகளுக்கு மிகப் பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளன. பருத்தி பொருட்களுடன் ஒப்படுகையில் செயற்கை இழை ஜவுளிப் பொருட்களின் விலை மிகவும் குறைவு. சிறந்த தரத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன” என்றார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறும்போது, “பாலியஸ்டர் நூலை மறுசுழற்சி செய்வது எளிது. அதேநேரத்தில், பாலியஸ்டர் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காற்றோட்டத்தை கட்டுப்படுத்தும். வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் இத்தகைய ஆடைகளைப் பயன்படுத்துவதால் தோல் வியாதிகள் ஏற்படும். குளிர் பிரதேசங்களில் அவற்றை அதிகம் வர்த்தகம் செய்ய ஊக்குவிக்கலாம். தீங்கு விளைவிக்கும் சாயங்களைப் பயன்படுத்தாமல், ஜவுளிப் பொருட்களைத் தயாரிப்பதே நல்லது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here