தலைநகரில் உள்ள பாரம்பரிய பல்கலைக் கழகம் ஒன்றுக்கு சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்வதில் ஆலயக் கட்சிக்குள் அடிதடியே நிகழ்ந்து விடும் போலிருக்கிறது. இந்த விவகாரத்தில், சின்னவர் தரப்பு சொல்லியும் விடாப்பிடியாக இருக்கிறதாம் அந்த ரெண்டெழுத்து மாண்புமிகு தரப்பு.
சிண்டிகேட்டுக்கு துறை சார்ந்த அமைச்சரானவர் தனக்கு வேண்டப்பட்ட ‘கீதப்’ பெண்மணியை சிபாரிசு செய்தாராம். ஆனால், “அந்த இடத்துக்கு அய்யா சொன்ன ஆளைத்தான் போடவேண்டும்” என காவிரிக் கரையிலிருந்து ரெண்டெழுத்து அமைச்சரின் காரியதரிசி கண்டிஷனாகச் சொல்லிவிட்டாராம். இதனால், கழகத்தில் முதன்மையாய் இருக்கும் ‘அந்த அய்யா’வை எதிர்த்து தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டாராம் துறைக்கு பொறுப்பானவராய் இருக்கும் ஜுனியர் மாண்புமிகு.
ஆனாலும், சிண்டிகேட்டுக்குள் வருவதே தனது லட்சியம் எனச் சொல்லி கருத்தாய் காரியமாற்றி வரும் ‘கீதப்’ பெண்மணி, அடுத்த ரூட்டாக தலைநகரில் கோலோச்சும் கட்சியின் ‘அரச’ மாவட்டச் செயலாளரை பிடித்து தனது விருப்பத்தைச் சொன்னாராம். காரியத்தை முடித்துத் தருவதாகச் சொல்லி வாக்குக் கொடுத்தஅவரும் விஷயத்தை சின்னவரின் கவனத்துக்குக் கொண்டு போனாராம்.
அதையடுத்து ‘கீதப்’ பெண்மணியை சிண்டிகேட்டில்அமரவைக்கலாம் என சின்னவர் தரப்பில் இருந்து சிக்னல் போனதாம். ஆனாலும், “அய்யா சொன்ன கட்சிக்கு விசுவாசமான அந்த நபரைத்தான் போட வேண்டும்” என இன்னமும் பிடிவாதமாய் இருக்கிறாராம் காவிரிக் கரை காரியதரிசி.














