டெல்லி முதல்வரின் உதவியாளரால் ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி முதல்வரின் இல்லத்தில் டெல்லி போலீஸாரும், தடயவியல் துறையும் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். திங்கள்கிழமை (மே 13) காலை டெல்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கேஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாம் தாக்கப்பட்டதாக புகார் கூறினார். இந்தச் சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்வாதி மலிவால் அமர்ந்திருக்க, அவரை பாதுகாவலர்கள் வீட்டை விட்டு வெளியேற சொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சில விநாடிகளே உள்ள அந்த வீடியோவில் பாதுகாவலர்கள் வெளியேறச் சொல்ல, அதற்கு ஸ்வாதி, “அது நடக்காது. டிசிபியிடம் பேச என்னை அனுமதியுங்கள். காவல் துறையில் புகார் கூறுவேன். அதுவரை இங்கேயே இருப்பேன்” என்று கூறுகிறார்.
பதிலுக்கு பாதுகாவலர்களோ, “டிசிபிக்கு உடனே தகவல் தெரிவிக்கிறோம். அதுவரை எங்களுடன் வாருங்கள். நீங்களாக புகார் தெரிவிப்பது இங்கே நடக்காது” என்று வாதம் செய்கின்றனர். பதிலுக்கு ஸ்வாதி பேசுகையில், “இங்கே இப்போது நான் புகார் கூறுவேன். நீங்கள் என்னை தொட்டால் உங்கள் வேலையை நான் பறிப்பேன். காவல் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். போலீஸ் வரட்டும்” என அங்கு ஸ்வாதிக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீடிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஸ்வாதி தாக்கப்பட்ட விவகாரத்தில், எப்ஐஆர் தகவல்கள் சில மணிநேரங்கள் முன்பு வெளியிடப்பட்டன. இந்தநிலையில், அது தொடர்பான வீடியோ வெளியாகி இந்த விவகாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வாதி மலிவால், “வழக்கம் போல இம்முறையும் அரசியல் ஹிட்மேன் தன்னை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியுள்ளார். வெறுமனே ட்வீட் செய்வதன் மூலமும், வீடியோக்களை வெளியிடுவதன் மூலம், குற்றத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் நினைக்கிறார். ஒருவரை அடிப்பதை வீடியோ எடுத்தது யார்? டெல்லி முதல்வரின் வீட்டின் அறையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மை அனைவருக்கும் தெரியவரும். அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் அனைத்து உண்மையும் உலகின் முன் வெளிவரும்” என்று அதில் கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று காலை வெளியிட்ட பதிவில், “எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. சம்பவம் தொடர்பாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த சில நாட்களாகவே எனக்கு சிரமமான நாட்களாக அமைந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு எனது நன்றி.
எனது பிம்பத்தைக் கெடுக்க முயல்பவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நமது நாட்டில் முக்கியமான தேர்தல் நடக்கிறது. தற்போது ஸ்வாதி மாலிவால் முக்கியமில்லை. நாட்டின் பிரச்சினைகளே முக்கியம். பாஜகவினருக்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் உள்ளது. எனக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.