சமூக ஊடக தளங்களில் ஆபாச காட்சிப் பதிவுகளை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்குவது அவசியம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சமூக ஊடக தளங்களில் சட்டவிரோதமான முறையில் பாலியல் மற்றும் பாலியல் தொடர்பான வீடியோக்களை ஒளிபரப்புவதை தடுக்க தற்போதுள்ள வழிமுறைகள் குறித்து மக்களவையில் பாஜக எம்.பி. அருண் கோவில் நேற்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர், “சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளதா?” என்றார்.
இதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு: தற்போது சமூக ஊடகங்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கான தளமாக உள்ளன. ஆனால் இத்தளங்களில் கட்டுப்பாடற்ற மற்றும் மோசமான உள்ளடக்கம் காணப்படுகிறது. சமூக ஊடக தளங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்களை இன்னும் கடுமையாக்குவது மிகவும் அவசியம் ஆகும். நாடாளுமன்ற நிலைக்குழு இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் இன்னும் கடுமையான சட்டங்களை உருவாக்க ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.