ரஷ்யா அதிகளவு கச்சா எண்ணெய் சப்ளை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

0
25

இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை சப்ளை செய்து வரும் நாடாக தற்போது ரஷ்யா உருவாகியுள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற எப்ஐபிஐ ஆயில் அன்ட் கேஸ் விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. 2022 பிப்ரவரி முதல் இந்த அளவு அதிகரித்து வருகிறது. தற்போதைய கணக்குப்படி இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை விநியோகம் செய்வது ரஷ்யாதான்.

இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவில் 35 சதவீதம் ரஷ்யாவிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த அளவு வேறுபடுகிறது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காவிட்டால் சர்வதேச அளவில் கச்சா என்ணெய் விலை 200 டாலரைத் தாண்டி இருக்கும். அது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் முடிவால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றம் தடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவுக்கு ரஷ்யாவைத் தவிர சவுதி அரேபியா, யுஏஇ, இராக், குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளும் கச்சா எண்ணெயை சப்ளை செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here