வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை டிச.12-ல் ஸ்டாலின் திறக்கிறார்

0
281

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கத்தில் மகாதேவர் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து 1924-ம் ஆண்டு அங்கு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பெரியார் அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்தி, மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினார். இப்போராட்டம் வெற்றி பெற்றதால். ‘வைக்கம் வீரர் என பெரியார் போற்றப்பட்டார். இப்போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே, போராட்ட வெற்றியை நினைவுகூரும் விதமாக, வைக்கத்தில் பெரியாருக்கு சிலை அமைக்கப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது. அந்த நினைவகம் பழமையாக மாறியதால், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதை ரூ.8.14 கோடியில் சீரமைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, நினைவகத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் அவ்வப்போது சென்று பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினர். சீரமைப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவகத்தில் பெரியார் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சி கூடம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். விழாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை வகிக்கிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், கோட்டயம் எம்.பி. கே.பிரான்சிஸ் ஜார்ஜ், வைக்கம் எம்எல்ஏ ஆஷா, ஆட்சியர் ஜான் வி.சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்கிறார். கேரள தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் நன்றி தெரிவிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி கோட்டயம் செல்கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here