டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட SP யாக சுமார் 20 மாதங்கள் பணியாற்றினார். அது வெறும் பணிக்காலம் அல்ல, மக்களுக்கு அது ஒரு நம்பிக்கைக்காலம். அவர் இருந்த காலத்தில் குற்றங்கள் குறைந்தன, விபத்துகள் குறைந்தன, பெண்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். இளைஞர்களுக்காக ‘வெற்றிப் பாதை’ என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து, நீங்களும் அரசுப் பணிக்கு வரலாம், சாதிக்கலாம் என்று தோள் கொடுத்தார். ஹெல்மெட் என்பது வெறும் அபராதத்திற்காக அல்ல, அது ஒரு உயிரை, ஒரு குடும்பத்தை காப்பாற்ற என்பதை ஒவ்வொரு வீடும் உணரும் வரை பேசினார். ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை பழக்கமாக்கினார். இப்படி மக்களோடு மக்களாக நின்ற ஒரு அதிகாரி, சில சூழ்நிலைகளால் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்ற போது, குமரி மாவட்டமே கனத்த மனதோடு தான் பார்த்தது. நீண்ட காத்திருப்புக்கு பின், இன்று அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல SP யாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார். அதே நேரத்தில் குமரி மக்களுக்கு ஒரு சிறு ஆதங்கம். களத்தில் இறங்கி, மக்களிடம் நேரடியாக பணியாற்றி மாற்றத்தை கொண்டு வரும் இவரை போன்ற ஒரு இளம் அதிகாரியை, மீண்டும் ஒரு களப்பணியில் – மக்களோடு கலந்து பணி செய்யும் மாவட்ட SP யாக பார்க்கவே ஆசைப்பட்டார்கள். இவர் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் அந்த மாவட்டம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. தற்போது அவருக்கு அலுவலகம் சார்ந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் என்ன காரணம் என்று பேச விரும்பவில்லை. ஏனென்றால் மக்களுக்கு தெரியும், “வைரம் எந்த பெட்டியில் இருந்தாலும் ஜொலிக்கும், நல்ல விதை எந்த மண்ணில் விழுந்தாலும் விருட்சமாகும்” ஸ்டாலின் IPS சார் எந்த பொறுப்பில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுவார். இந்த புதிய பொறுப்பு அவருக்கு இன்னும் பல அனுபவங்களை, உயரங்களை தரும் என்று மனதார நம்புகிறோம். பொருளாதார குற்றப்பிரிவிலும் அவர் தனது முத்திரையை பதிப்பார் என்பது உறுதி. ஒரு நல்ல அதிகாரி சிறக்கும் போது, அது மக்களுக்கு பலன், அரசுக்கு பெருமை.
