தென் ஆப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 400 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 124.1 ஓவர்களில் 557 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மார்க்கஸ் ஆக்கர்மேன் 157, ரியான் ரிக்கெல்டன் 102, ஜுபைர் ஹம்சா 83, காகிசோ ரபாடா 72 ரன்கள் விளாசினர். 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்தது.
முஸ்பிகுர் ரகிம் 5, லிட்டன் தாஸ் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 55.3 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முஸ்பிகுர் ரகிம் 22, லிட்டன் தாஸ் 39, மெஹிதி ஹசன் மிராஸ் 15, ஹசன் மஹ்மூத் 4, எபாதத் ஹொசைன் 0 ரன்களில் நடையை கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 12.3 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ரபாடா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 12 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 1.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. மார்க்ரம் 8 ரன்கள் சேர்த்தார். மார்க்கஸ் ஆக்கர்மேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்குகிறது.














