சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’. மலர்விழி நடேசன் இயக்கியுள்ள இப்படத்தை அவரும் ஷிவானி சுப்ரமணியும் தயாரித்துள்ளனர். ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து மலர்விழி நடேசன் கூறும்போது, “இது நான் இயக்கியுள்ள 2-வது திரைப்படம். ‘திருவாளர் பஞ்சாங்கம்’ என்ற காமெடி படத்தை ஏற்கெனவே இயக்கி இருக்கிறேன். தனிப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் நடக்கும் பிரச்சினைதான் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை. ஹீரோவுக்கு ஒரு நொடியில் நடந்த சம்பவம், அவர் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிடுகிறது.
அது என்ன என்று திரைக்கதைச் செல்லும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய பொழுதுபோக்கு படம். எல்லோரும் சந்தித்திருக்கக் கூடிய ஒரு சம்பவம் என்பதால், பார்வையாளர்கள் கதையுடன் எளிதில் ‘கனெக்ட்’ ஆவார்கள். இதில் மெசேஜ் எதுவும் சொல்லவில்லை. படம் முடிந்து வெளி வரும்போது, பார்வையாளர்கள் எதை எடுத்துக் கொள்கிறார்களோ அதுதான் மெசேஜ்.
இந்தக் கதைக்கு அன்பு, கோபம் நிறைந்த ஹீரோ தேவைப்பட்டார். அதற்கு சந்தோஷ் பிரதாப் சரியாகப் பொருந்தினார். பவ்யா, பூஜிதாவும் அப்படித்தான். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.















