2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, கத்தார், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய 6 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் தங்களது போட்டி நடத்தும் திட்டங்களை வரும் நவம்பர் மாதம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) எதிர்கால போட்டிகளை நடத்தும் தேர்வுக் குழுவிடம் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றதில்லை. இந்நிலையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான இந்தியாவின் முக்கிய தேர்வாக அகமதாபாத் நகரம் அமைந்துள்ளது. போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா கடந்த 2024-ம் ஆண்டே ஐஓசியிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்திருந்தது.
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரங்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில் கடந்த ஜூன் மாதம் ஐஓசி புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி வரும் நவம்பர் மாதம் நடைபெறும் திட்ட விளக்க கூட்டத்துக்குப் பிறகு புதிய நடைமுறைகள் தொடங்கும். இதைத் தொடர்ந்து 2028-ம் ஆண்டு எதிர்கால போட்டியை நடத்தும் தேர்வுக் குழு தனது அறிக்கையை ஐஓசி உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கும்.
அதன்பின்னர் 2029-ம் ஆண்டு மத்தியில் ஐஓசி நிர்வாகக் குழு, விருப்பம் உள்ள நகரங்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை வாக்கெடுப்புக்காக ஐஓசி கூட்டத்தில் முன்வைக்கும். இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நாடே 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெறும்.














