குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர். பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2025 நவம்பரில் ஒரு முதலீட்டு வாய்ப்பைக் கண்டுள்ளார். அது உண்மையானது என்று நம்பவைப்பதற்காக, பிரபல தொழிலதிபர்களின் பெயர்கள் அதில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதை நம்பி அவர் அதில் இருந்த இணைப்பை கிளிக் செய்துள்ளார்.
இந்த நடவடிக்கை அவரை ‘வென்ட்ரா ட்ரேட்’ என்ற வர்த்தக செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்தது. இதுவே அவரது பல மாத கால துயரத்துக்கும், இறுதியில் வாழ்நாள் சேமிப்பை அவர் இழப்பதற்கும் தொடக்கமாக அமைந்தது. செயலியை நிறுவியதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலம் அந்த முதியவரைத் தொடர்பு கொண்ட சிலர், தங்களை தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் போர்ட் ஃபோலியோ மேலாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பங்குச் சந்தை முதலீடுகள் மற்றும் கமாடிட்டி வர்த்தகம் மூலம் அதிக லாபம் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, மோசடி செய்பவர்கள் ஆரம்பத்தில் அவரது முந்தைய முதலீடுகளின் லாபம் என்று கூறி ரூ.21,999-ஐ அவரது கணக்கில் செலுத்தினர். இந்த வெற்றியினாலும், அந்த செயலியின் திரையில் காட்டப்பட்ட போலி லாபங்களினாலும் ஊக்கமடைந்த அந்த முதியவர், 2025 நவம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பெரும் தொகையை பரிமாற்றம் செய்தார்.
பாதிக்கப்பட்ட முதியவர் தனது கணக்கில் சேர்ந்த தொகையைத் திரும்பப் பெற முயன்றபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. விதிமுறைச் சிக்கல்கள் காரணமாக அவரது வர்த்தகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி மோசடி செய்பவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.
ஒட்டுமொத்த முதலீட்டுத் தளமும் ஒரு திட்டமிட்ட போலி கட்டமைப்பு என்பதை உணர்வதற்குள், கடந்த 7 மாத காலத்தில் அந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மொத்தம் ரூ.90.75 லட்சத்தை இழந்துள்ளார். அவரது புகாரைத் தொடர்ந்து, போலீஸார் விசாரிக்கின்றனர்.















