கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் முதல்வராக முடியவில்லை: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

0
101

கடவுள் அருள் இல்லாததால்தான் சசிகலாவால் தமிழகத்தின் முதல்வராக முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்துவிடமுடியாது. திமுகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். அதற்கு, `யார் காலில் விழுந்து முதல்வர் ஆனீர்கள்? என்று உதயநிதி கேட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியேற்க வைத்தனர். அதன்பிறகு, நானே முதல்வராகப் பதவி
ஏற்கிறேன் என சசிகலா தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், தெய்வம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்துவிட்டனர். அதன்பிறகு யார் முதல்வர் என்று கேள்விஎழுந்தது.

உண்மையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் சசிகலாதான். நீதிமன்றம் தண்டனை விதித்ததால்தான், அவரால் முதல்வராக முடியவில்லை. அவருக்கு கடவுள் அருள் இல்லை. அதன்பிறகு, கடவுள் அருளால் அதிமுகவில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒரு மனதாக பழனிசாமியை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தோம். அவர் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வரவில்லை. ஒரு பதவிக்கு வரும்போது, மூத்தவர் காலில் விழுவது தவறில்லை. ஆனால், இதை தவறு என்கிறார் உதயநிதி. வயதுக்கு தகுந்தாற்போல அவர் பேச வேண்டும். அவரது தாத்தாவே (கருணாநிதி) எம்ஜிஆர் தயவில்தான் முதல்வரானார். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here