தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை; 3 மாதங்களில் 6,500 கடைகளுக்கு ‘சீல்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0
201

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாமைசென்னை நந்தனத்தில் நடத்தின.இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் இளைஞர்கள் நல விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது:

புற்றுநோய் பரிசோதனை திட்டம்: தமிழகத்தில் புகையிலை பொருட்கள் கட்டுப்படுத்துதல், அவற்றால் ஏற்படும் புற்றுநோய்பாதிப்புகளை தடுத்தல் போன்றபணிகள் நடந்து வருகின்றன.ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய நான்கு மாவட்டங்களில் 54 லட்சம்பேருக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு, தோல்பதனிடுதல், சாய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நான்கரை லட்சம் பேருக்கு புற்றுநோய்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்படுவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here