மக்களுடன் முதல்வர’ திட்டத்தின்கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில்,1,598 பேருக்கு அரசுப் பணி நியமனஆணைகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலர்களைத் தேடிச்சென்று மக்கள் மனுக்களை தந்து குறைகளைக் தெரிவித்து, தீர்வு காண்பது என்பது இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி அதிகாரிகள் சென்றுகுறை கேட்டுத் தீர்த்து வைக்க விரும்பினார்.
முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். அந்த வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ என்னும் ஒரு முன்னோடித் திட்டத்தை கோவையில் கடந்தாண்டு டிச.18-ல் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசால் 13 அரசுத் துறைகள் மூலம் மக்களுக்குப் வழங்கப்படும் சேவைகள் அடிப்படையில், அந்தத் துறை அதிகாரிகளுடன் இத்திட்டத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 35 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பொதுப்பணி, கால்நடைப் பராமரிப்பு, நீர்வளம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,598 பேருக்கு பணி நியமனஆணைகளையும் வழங்குகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.