நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, கடந்த 9-ம் தேதி தென் தாமரைகுளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணை கைதியாக நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 13-ம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, சிறை வார்டன்கள் 3 பேர், 8 கைதிகள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இக் கொலை வழக்கை நேசமணி நகர் போலீஸார் விசாரித்து வந்தனர். அத்துடன் நாகர்கோவில் சிறையில் தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு முக்கிய தடயங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சபரிவர்மனின் செல்போன் சிறையிலேயே காணாமல் போயுள்ளது. அந்த செல்போனில் அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சபரிவர்மனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், அவரது மனைவிக்கு தற்காலிக அரசு பணி, வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கும், மகனின் மேல்படிப்புக்கும் நிவாரணத் தொகை ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். சிபிசிஐடி போலீஸார் முதற்கட்டமாக சபரிவர்மனின் குடும்பத்தினரிடமும், தென் தாமரைகுளம் காவல்நிலையத்திலும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
