கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில், சனிக்கிழமை நள்ளிரவு ரூ.26 ஆயிரம் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நாகா்கோவில் – திருநெல்வேலி பிரதான சாலையில், தோவாளை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், விற்பனையாளராக கிருஷ்ணன்புதூரைச் சோ்ந்த ஆறுமுகம்பிள்ளை (47) பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஆறுமுகம்பிள்ளை சனிக்கிழமை இரவு வசூலான ரூ.26 ஆயிரத்தை மேஜையில் வைத்து விட்டு சங்கத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறுமுகம்பிள்ளை சங்கத்தை திறக்க வந்தபோது, சங்கத்தின் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, சங்கத்திலிருந்து ரூ.26 ஆயிரம் திருடுப் போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்பேரில், ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
