தமிழக மின்துறைக்கு 2012-16 காலகட்டத்தில் அதானி நிறுவனம் தரமற்ற நிலக்கரியை விநியோகித்ததாகவும், இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வெளியான செய்தி, மீண்டும் கிளம்பும் அதே புகார் காரணமாக பேசுபொருளாக மாறியுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதாவது 2012-16 காலகட்டத்தில், மின்வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு நந்துள்ளதாக சமீபத்தில் ஆங்கில இதழ் ஒன்றில் செய்தி வெளியானது. குறிப்பாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2014-ல் 15 லட்சம் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை கொள்முதல் செய்தது.
இதில் தமிழகத்துக்காக, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை அதானி நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. அந்த நிலக்கரி ஒரு கிலோவுக்கு 3,500 கலோரி தரம் கொண்டதாகும். ஆனால், அந்த நிலக்கரியை அதிக தரம் கொண்டதாக அதாவது ஒரு கிலோவுக்கு 6 ஆயிரம் கலோரி கொண்டது என்று ஆவணங்கள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஒரு டன் நிலக்கரியை 28 டாலருக்கு வாங்கி, 91 டாலருக்கு தமிழக அரசுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து வாங்கப்பட்ட நிலக்கரி தொகுப்பு குறித்து ஆய்வு செய்ததில், சராசரியாக, மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு 81 முதல் 89 டாலர் வரையில் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, விலையை அதிகரிப்பதற்காக இந்தோனேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு நிலக்கரி கப்பல்கள் வரும் வழியில் பிரிட்டிஷ்வெர்ஜின் தீவுகள், சிங்கப்பூரில் உள்ள அதானி நிறுவனத்துக்கு நிலக்கரி விற்கப்பட்டு அதன்பின்தமிழகம் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், போக்குவரத்து செலவையும் சேர்த்து, அதானி நிறுவனத்துக்கு இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து கொள்முதல் செய்து, விலையை அதிகரித்து தமிழக அரசிடம் விற்பனை செய்துள்ளதால், தமிழக அரசுக்கு இந்த இறக்குமதி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்தியதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்தாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், அதானி நிறுவனம் இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளதுடன், நிலக்கரியானது சரியானமதிப்பீடு செய்யப்பட்டு அதன்பின்பே விற்பனை செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த செய்தியை குறிப்பிட்டு, தனது எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமானத்துக்குரிய நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை போலி பில்கள் மூலம் 3 மடங்கு விலைக்கு விற்று பல ஆயிரம் கோடியை கொள்ளையடித்துள்ளார். ஜூன் 4-ம் தேதிக்குப்பின் இதனை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள அறப்போர் இயக்கம் சார்பில், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்போதே, இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தரம் குறைந்த நிலக்கரி விவகாரம் கணக்கு தணிக்கை அறிக்கையிலும் வெளிப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த செய்தி வெளியானதால் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும், முறைகேடு நடந்ததாககூறப்பட்ட, 2012-16-ல் ஆட்சியில் இருந்த அதிமுக அரசில், மின் வாரிய அமைச்சராக பணியாற்றிய நத்தம் விஸ்வநாதனிடம் இதுதொடர்பாக விளக்கம் கோர, பலமுறை தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால், இந்த செய்தி அச்சுக்கு செல்லும்வரை அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.