அமேதியின் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி, அங்கு 1981-ல் நடைபெற்ற தேர்தல் வன்முறையை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது ராஜீவ் காந்திக்கு எதிராக சுயேட்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தியை தாக்கியதுடன், அவரது உடைகளை கிழிக்கவும் காங்கிரஸார் முயற்சித்ததாகக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அமேதியில் ஐந்தாம் கட்டமாக தேர்தல் மே 20-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே அவர் ஊடகங்களுக்கும் பேட்டிகளை அளித்து வருகிறார்.
அதன்படி, பேட்டி ஒன்றில் ஸ்மிருதி இரானி, அமேதியின்1981 மக்களவை தேர்தல் சம்பவங்களை நினைவுகூர்ந்தார். 1980-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் 1981ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அமேதியில் சில வன்முறைகள் நடைபெற்றுள்ளன. இதைதான் தனது பேட்டியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நினைவு கூர்ந்துள்ளார்.
இதில் அமேதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட மேனகா காந்தி மீது காங்கிரஸாரின் வெறிச்செயலைக் குறிப்பிட்ட அவர், “காங்கிரஸ் தனது சொந்த மருமகளான மேனகா காந்தியை அமேதியில் 1981ல் அவமானப்படுத்தியது. அப்போது போட்டியிலிருந்து அவரை விலக்கிவைக்க மேனகாவை தாக்கினர். இத்துடன், அவரது உடைகளையும் கிழித்து அவமானப்படுத்த முயன்றனர். இத்தனைக்கும் ராஜீவின் சகோதரரும், மேனகாவின் கணவருமான சஞ்சய் காந்தியை தான் உயிருடன் இருக்கும்போது அவரை தனது அரசியல் வாரிசாக இந்திரா குறிப்பிட்டிருந்தார்.” எனத் தெரிவித்தார்.
இந்தமுறை, அமேதியில் காங்கிரஸின் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். இவர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக அமேதி, ரேபரேலியில் தொகுதிப் பணிகளில் ஈடுபட்டவர். பாஜகவில் இணைந்து அதன் மூத்த தலைவராகிவிட்ட மேனகா காந்தி, அருகிலுள்ள சுல்தான்பூரில் போட்டியிடுகிறார். இவரது மகனான சஞ்சய் காந்திக்கு மீண்டும் பிலிபித்தில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.