கரூர், பெரம்பலூரில் ரூ.5,000 கோடியில் காலணி தொழிற்சாலைகள்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

0
227

கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தி்ட்டங்களை நிறுவ, எவர்வான் கோத்தாரி புட்வேர் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவ, தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரும் அளவில் முதலீடுகளை ஈர்த்து, தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யவும், தமிழக அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தொழிற்சாலைகள் அமைக்கப்பகிறது. இதனால், இம்மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் மேம்படும்.

நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன் குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here