கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதாவது குமரி மாவட்டத்தில் போலீசார் நலச்சங்க அலுவலகம் அமைக்க இடம் தர வேண்டும்.
சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் போலீசாருக்கு வழங்குவதை போல் தமிழகத்திலும் கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும். போலீஸ் கேண்டீன்களில் வாங்கும் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சங்க தலைவர் பென்சீகர், செயலாளர் சதீஷ் குமார், மகளிரணி அணி செயலாளர் ரோஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் அல்போன்ஸ், பொருளாளர் முருகேசன், வக்கீல் மரிய ஸ்டீபன், ஜோசப் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.