மே.வங்கத்தில் 2 பூத்களில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு

0
95

மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகியதேதிகளில் 7 கட்டமாக 543 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகிறது.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின்படி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தவுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் இவ்வாறாக தேர்தல் ஆணையம் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

முன்னதாக நேற்று இண்டியா கூட்டணி பிரதிநிதிகள் குழு நேற்று தேர்தல் ஆணைய அமர்வை சந்தித்து வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து விதிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் முன்னர் தபால் வாக்குகளை முழுமையாக எண்ணி வெளியிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் இண்டியா கூட்டணி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

நாளை மக்களவை தேர்தல் முடிவுடன், ஆந்திர பிரதேசம், ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஆகியனவும் வெளியாகின்றன.

முன்னதாக சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தது. சிக்கிம்மில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா கட்சி இமாலய வெற்றியை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here