ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை கடும் சரிவை சந்தித்து இருந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 79 ரன்கள் என்ற நிலையில் இருந்து 96 ரன்களை எட்டுவதற்குள் மேற்கொண்டு 4 விக்கெட்களை தாரை வார்த்து இருந்தது. முடிவில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது ஆர்சிபி அணி. திடீர் சரிவுகள் ஏற்பட்டபோதிலும், இந்த சீசனில் ஆர்சிபி-யின் பேட்டிங் பெரும்பாலும் அதிரடியான ஆட்டத்தையே மையமாகவே கொண்டுள்ளது.
விராட் கோலி 379 ரன்களுடன் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். அதே நேரத்தில் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஆகியோரும் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தொடக்க வீரரான பில் சால்ட் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதால் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி தொடக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஜேக்கப் பெத்தேல் வசம் உள்ளது. ஜேக்கப் பெத்தேல் டி 20 உலகக் கோப்பையின் போது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை இநதியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் லக்னோ அணி 228 ரன்கள் குவித்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.
நிலையற்ற ஆட்டத்திறன், யுத்திகளில் உறுதியின்மை, நெருக்கடியான நேரங்களில் போட்டியை வெற்றிகரமாக முடிக்கத் தவறுவது போன்ற காரணங்களால் லக்னோ அணி இந்த சீசனில் சிதைந்து போயுள்ளது. மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் போன்ற பிரதான பேட்டர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றி அமைப்பதும் அணியின் சிக்கல்களை அதிகப்படுத்தியுள்ளது. ரிஷப் பந்த்தின் பேட்டிங்கும் அவரது தலைமைப்பண்பும் கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியின் பேட்டிங் வரிசை ஆர்சிபி அணியின் அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலைமையிலான வலிமையான பந்துவீச்சை எதிர்கொள்கிறது. புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஜோடி இந்த சீசனில் திறம்பட செயல்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை வெறும் 75 ரன்களுக்கு சுருட்டியதில் இவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதில் புவனேஷ்வர் குமார் நடப்பு சீசனில் 17 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கிருணல் பாண்டியாவும் நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர், இதுவரை ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், ‘பவுன்சர்’ பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்குப் சவால் அளித்து வருகிறார். கடந்த போட்டியில் சுயாஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
லக்னோ அணியைப் பொறுத்தவரை பிரின்ஸ் யாதவ் மற்றும் மோஷின் கான் முறையே 13 மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களாகத் திகழ்கின்றனர். முகமது ஷமி இந்த சீசனை வலுவாகத் தொடங்கினாலும், சமீபத்திய போட்டிகளில் சீரான செயல் திறனை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருவதுடன் அதிக ரன்களையும் விட்டுக்கொடுத்துள்ளார்.
லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இறுதிக்கட்ட ஓவர்களில் கட்டுப்பாட்டை இழந்து வருகின்றனர். இது எதிரணி பேட்டர்கள் மிக வேகமாக ரன்களைக் குவிக்க வழிவகுக்கிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி பேட்டர்களுக்கு எதிராக பந்துவீசும் போது அவர்களுக்கு இது ஒரு கடினமான சவாலாக இருக்கும்.
நடப்பு தொடரில் இரு அணிகளும் 2-வது முறையாக மோத உள்ளன. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றிருந்தது. அந்த வெற்றியை தொடரச் செய்வதில் ஆர்சிபி அணி தீவிரம் காட்டக்கூடும்.
