கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்றே ராஜ்நாத்சிங் பங்கேற்றார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
தென்னிந்திய அளவிலான செய்தி ஒளிபரப்புத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை அகில இந்திய வானொலி மையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன் டிடி தமிழ் சேனல் மேம்படுத்தப்பட்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களில் டிடி தமிழின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.இந்நிலையில் சிப்காட் நிறுவனம் சார்பில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் மகளிருக்காக காஞ்சிபுரத்தில் விடுதி கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ், தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு ரூ.37 கோடி மத்திய அரசின் மானியமும், ரூ.498 கோடி எஸ்பிஐ வங்கி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முழுமையாக மத்திய அரசின்80 சதவீத நிதி உதவியோடு கட்டப்பட்டுள்ள தங்குமிடத்தை திறந்து வைத்த முதல்வர்குறைந்தபட்சம் மத்திய அரசின்பெயரையாவது இதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதில் தான் கவனமாக இருக்கிறது.
அதேபோல மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதை அரசியலுக்கு அப்பாற்பட்டு தான்பார்க்க வேண்டும். தமிழக அரசின்சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் தான் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.