நடப்பு ஐபிஎல் சீசனில் புது பாய்ச்சலோடு புறப்பட்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அந்த அணி அசத்தியுள்ளது. இதற்கான காரணங்களில் ஒருவராக அறியப்படுகிறார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
கடந்த 2020-ம் ஆண்டு சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். கடந்த சீசனில் கொல்கத்தாவை வெற்றி பெற செய்தார். இப்படி இரு வேறு அணிகளை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இறுதி ஆட்டம் வரை வழிநடத்திய ஒரே கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், அதே மாயத்தை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அது அவருக்கு கேப்டனாக மூன்று ஐபிஎல் அணிகளுடன் விளையாடும் ஹாட்ரிக் வாய்ப்பாக இருக்கும்.
இதை விட சிறந்த ஸ்டார்ட் வேண்டுமென யாரும் குறை சொல்லாத வகையில் இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் பஞ்சாப் அணியை வழிநடத்தி உள்ளார் ஸ்ரேயாஸ். மேலும், இரண்டு இன்னிங்ஸ் விளையாடி 149 ரன்களை எடுத்துள்ளார். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் நாட்-அவுட் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயர், தனது கிரிக்கெட் கேரியரில் ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார் என்று சொல்லலாம். சிறப்பான முறையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது பேட்டிங் திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இப்போது அதை அப்படியே ஐபிஎல் கிரிக்கெட் பக்கமாக டைவர்ட் செய்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் 30 வயதான ஸ்ரேயாஸ். மொத்தம் 3,276 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 33.77, ஸ்ட்ரைக் ரேட் 129. எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசனில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 206 என உள்ளது. இதற்கு முக்கிய காரணம் முன் எப்போதும் இல்லாத வகையில் சிக்ஸர் விளாசும் அவரது திறன் தான். மொத்தம் 13 சிக்ஸர்களை இந்த சீசனில் இரண்டு இன்னிங்ஸில் விளாசி உள்ளார். இருப்பினும் இந்த சீசனின் அடுத்தடுத்த போட்டிகளை கொண்டு தான் அவரது பேட்டிங் செயல்பாடு எப்படி என்பது தெரியவரும்.
தனது குறைகளை அவர் சரி செய்து கொண்டுள்ளார் எனவும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக ஷார்ட் லெந்த்தில் வீசப்படும் பந்துக்கு எதிரான அவரது தடுமாற்றம் இப்போது அறவே இல்லை. அந்த லெந்த்தில் பந்தை வீசினால் பேட்டை ஒரு சுழற்று சுழற்றுகிறார் ஸ்ரேயாஸ்.
பேட்டிங் மட்டுமல்லாது அவரது கேப்டன்சி திறனும் பக்குவம் அடைந்துள்ளது என்பதை இந்த சீசனில் பார்க்க முடிகிறது. குஜராத் உடனான ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் வைஷாக் விஜயகுமாரை பந்து வீச செய்தது, லக்னோ உடனான ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரனுக்கு கட்டம் கட்டி சஹல் மூலம் விக்கெட்டை தூக்கியது என கவனம் ஈர்த்துள்ளார். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் அதை இன்னும் பார்க்க முடியும்.
“அவர் எங்கள் அணியின் கேப்டனாக உள்ளது எங்களது அதிர்ஷ்டம். அனைத்து விஷயங்களிலும் புரிதலுடன் உள்ளார். தனக்கு வேண்டியது என்ன என்பதை தெளிவாக சொல்கிறார். அழுத்தம் நிறைந்த தருணங்களை நிதானத்துடன் அணுகுகிறார்” என கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ்.
2008 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 17 ஐபிஎல் சீசன்களில் ஒரே ஒரு முறை மட்டுமே பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் பட்டம் வெல்ல வேண்டுமென்ற அந்த அணியின் நெடுநாள் கனவை ஸ்ரேயாஸ் சாத்தியம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு துணையாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.