குமரி மாவட்டத்தில் படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (27-ம் தேதி) மாலையில் புதுக்கடை அருகே உள்ள மராயபுரம் வழியாக மீன் வண்டியில் மண்ணெண்ணெய் கடத்தி செல்வதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் சென்று கேரள பதிவெண் கொண்ட மீன் வாகனத்தை மராயபுரத்தில் வைத்து மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், போலீசார் வாகனத்தை சோதனையிட்ட போது உள்ளே 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 65 கேன்களில் 2 ஆயிரத்து 275 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மண்ணெண்ணெயுடன் வாகனத்தை கைப்பற்றி புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாவட்ட பறக்கும் படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனத்துடன் மண்ணெண்ணெயை ஒப்படைத்தனர்.