பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறையில் பணியாளர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், பதவி உயர்வு, விருப்ப மாறுதல் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் போக்குவரத்து பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லத்தக்க வகையிலான ஏபிசி முறையில் இடமாறுதல் வழங்குவதில் இருந்து அமைச்சுப் பணியாளர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக விருப்ப மாறுதல் கோரி விண்ணப்பித்திருப்பவர்களுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் இடமாறுதல், காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் பதவி உயர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பு சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமையில் சில நிர்வாகிகளுடன் ஆணையர் சுன்சோங்கம்ஜடக்சிரு பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.