அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் ஏப்.3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன்படி, ஆலந்தூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2013-ம் ஆண்டு சென்னை, தியாகராய நகரில் வீடு புகுந்து கொள்ளையடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஞானசேகரன் என தெரியவந்தது.
இதையடுத்து புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் மாம்பலம் போலீஸாரால் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, சைதாப்பேட்டை 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏப்.3-ம் தேதி வரை ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் புழல் சிறைக்கு ஞானசேகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.