சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிச.15-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஒவ்வோரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நம்ம யாத்ரியுடன் இணைந்து பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணித்த 40 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பீட்ஸ் அண்ட் மெட்ரோஸ் மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரபல சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஸ்ரீதர் சேனா மற்றும் பேட்சுலர்ஸ் பேன்ட் (Bachelor’s Band) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பெனுதர் பர்ஹி உட்பட பலர் பங்கேற்றனர்.