உலகளாவிய போர்ப் பதற்றங்கள், வர்த்தகப் பூசல்கள் மற்றும் மேலைநாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு இடையே, டெல்லியில் 18-வது பிரிக்ஸ் 2026 உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது.
இது வெறும் ‘சர்வதேச உச்சி மாநாட்டின் நிறைவு’ மட்டுமல்ல; மாறாக, ‘விக்சித் பாரத்’ எனும் வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தில் இந்தியாவின் உலகளாவிய ஆதிக்கத்தை பறைசாற்றும் நிகழ்வாகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு எப்போதுமே ஆட்படாது என்பதை தனது ‘ராஜதந்திர தன்னாட்சி’ கொள்கை மூலம் பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். மேலும், உலகப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு முடிவுகளைத் தீர்மானிக்கும் மையப்புள்ளியாக இந்தியாவை அவர் உயர்த்தியுள்ளார்.
சமரசக் குரலாக மோடி: வல்லரசு நாடுகளும், ஆசிய – ஐரோப்பிய நாடுகளும் பிளவுபட்டு நிற்கும் வேளையில், உலக அரசியல் முரண்பாடுகளைக் கடந்து அமைதியையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் முன்வைக்கும் சமரசக் குரலாகப் பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார்.
பாலஸ்தீனிய மக்களின் உரிமை, காசா போர் நிறுத்தம், மத்திய கிழக்கு ஆசியப் போர், உக்ரைன் – ரஷ்ய போர், போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணக் குரல் கொடுத்து, ‘சர்வதேச மதிப்புமிக்க தலைவராக’ உயர்ந்துள்ளார்.
ராஜதந்திரத்தின் அடையாளம்: அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராகவும், டாலருக்கு மாற்றாகவும் ‘பிரிக்ஸ் கரன்சி’ குறித்து பேசப்பட்டாலும், மேற்கத்திய நாடுகளின் பகையைத் தவிர்க்க நேரடியாக புதிய கரன்சி எதையும் கொண்டுவரவில்லை. அதேநேரம், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சிகளையே பரிமாறிக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் டாலரைச் சார்ந்திருக்கும் நிலை வெற்றிகரமாகக் குறைத்து மோடி தனது ராஜதந்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐ.நா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், ஐஎம்எஃப், உலக வங்கி ஆகியவற்றில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பங்கேற்பை அதிகரிக்க மோடி குரல் கொடுத்தார். வளரும் நாடுகளை வெறும் முடிவுகளை ஏற்கும் பார்வையாளர்களாக இல்லாமல், ‘உலக விதிகளைச் செதுக்கும் சக்தி’களாக உயர்த்தியதில் அவரது பங்களிப்பு இணையற்றது.
100% ஏற்கப்பட்ட டெல்லி பிரகடனம்: 140-க்கும் மேற்பட்ட சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கிய ‘புதுடெல்லி பிரகடனம் 2026’, எவ்வித எதிர்ப்புமின்றி 100 சதவீதம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல்கள் நிலவும் சூழலில், அந்நாடுகள் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே தளத்துக்கு வந்தது மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி.
இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஏற்க வைப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பாகிஸ்தானுக்கு ‘செக்’: எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி அளிப்பது ஆகியவற்றுக்கு எதிராக மறைமுகமாகப் பாகிஸ்தானுக்கு ‘செக்’ வைக்கும் விதமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம் என்ற ஒரே குடையின் கீழ் பிரிக்ஸ் நாடுகளைக் கொண்டுவந்து இந்தியாவின் கரத்தைப் பிரதமர் மோடி வலுப்படுத்தியுள்ளார்.
ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் உரிமை: சர்வதேச பண நிதியம் மற்றும் உலக வங்கியில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான பங்களிப்பு, வாக்களிக்கும் அதிகாரம் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்று மோடி முழங்கினார்.
தென்னாப்பிரிக்கா, எகிப்து, புருண்டி, நைஜீரிய நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியே நடத்தி முடித்த சந்திப்புகள் மூலம் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.
கோல்ட்மேன் சாக்ஸ் அமைப்பின் முன்னாள் நிபுணர் ஜிம் ஓ’நீல் கூறுகையில், “பிரதமர் மோடி, பிரிக்ஸ் மற்றும் மேற்கத்திய நாடுகள் இரண்டிலுமே விரும்பத்தக்க தலைவராக உருவெடுத்துள்ளார்” எனப் பாராட்டியுள்ளார்.
சந்தேகங்களைத் தகர்த்த தலைமை: 2024-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் 6 நாடுகள் இருந்த நிலையில், அதன்பின் மேலும் 5 நாடுகள் இணைந்து அமைப்பு விரிவடைந்தது. அதிகமான உறுப்பினர்கள் இணைவதால் பிரிக்ஸ் பிளவுபடலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்தனர்.
மாறுபட்ட அரசியல் அமைப்புகளையும் பிராந்தியப் போட்டிகளையும் கொண்ட நாடுகளை ஒரே அமைப்பில் வைக்க முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பினர். மேலும், இது மேற்கத்திய எதிர்ப்பு மோதல் களமாக மாறுமா அல்லது பயனற்ற பேச்சுமன்றமாக உருமாறிவிடுமா என்ற வெளிப்படை அழுத்தமும் அதிகரித்தது.
ஆனால், 2026-இல் இந்தியாவின் தலைமைத்துவமானது அந்த அமைப்பின் அடையாளத்தை நிலைப்படுத்தியது. பிரிக்ஸ் அமைப்பை மேற்கத்திய எதிர்ப்பு மன்றமாக மாற்றாமல், ‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் தெற்குலகத்துக்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ‘மேற்கத்திய சார்பற்ற, தீர்வு நோக்குடைய’ தளமாக வெளிப்படுத்தியது பிரதமர் மோடியின் தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்தியா – சீனா மற்றும் மேற்காசிய நாடுகளின் இணைப்பு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வந்திருந்தார். எல்லையில் நிலவிய பதற்றத்தை மறந்து, இருதரப்பு உறவுகளை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அணுகும் வகையில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கருத்து வேறுபாடுகள் மோதல்களாக மாறக்கூடாது என்றும், இருதரப்பு உறவுகளை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என்றும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
வர்த்தக ரீதியாக அமெரிக்காவை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பதற்கு பதிலாக, ஆசியாவின் பெரிய சந்தையைக் கொண்டுள்ள சீனாவை ஏற்றுமதிக்கு பயன்படுத்திக்கொள்ளும் பிரதமர் மோடியின் உத்திக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஈரான், யுஏஇ, சவுதி அரேபியா இணைப்பு: மேற்காசியாவில் உரசலில் இருக்கும் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, சிறப்பாக மாநாட்டை நடத்தி முடித்ததே மோடியின் தலைமைப் பண்புக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
பாரசீக வளைகுடா பகுதி முழுவதிலும் தனக்குள்ள நம்பிக்கையான உறவுகளைப் பயன்படுத்தி, முக்கியமான உயர்மட்டக் கலந்துரையாடல்களுக்கு ஒரு களத்தை அமைத்து, ஒருமித்த கருத்தை இந்தியா உருவாக்கியது.
பிரதமர் மோடிக்கும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுக்கும் இடையே நடந்த அன்பான சந்திப்பு இதற்குச் சான்றாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, அபுதாபியின் பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத் தூதுக் குழுவும், சவுதி அரேபியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இணை அமர்வு ஆலோசனைகளும் நடைபெற்றன.
ஹார்முஸ், செங்கடல் போன்ற முக்கிய நீர்வழிகளில் வர்த்தகக் கடல்சார் பாதுகாப்பைப் பராமரித்தல் மற்றும் ராணுவ மோதலைக் காட்டிலும் ராஜதந்திர வழியிலான பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவை இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டன.
மேற்கு ஆசியப் புவிசார் அரசியல் மோதல்கள் உச்சி மாநாட்டைத் தடம் புரளச் செய்துவிடுமோ என்ற சந்தேகத்தை உடைத்து, இந்திய விருந்தோம்பலின் கீழ் பிராந்தியப் போட்டியாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்ததே மோடியின் சாதனை.
கிழக்கு – மேற்கு சமநிலை & 15 இருதரப்பு சந்திப்புகள்: ‘குவாட்’, ‘ஜி20’ மற்றும் ‘பிரிக்ஸ்’ என அனைத்துத் தளங்களிலும் இந்தியா முக்கிய உறுப்பினராக இருந்து இருமுனை அரசியலைச் சமநிலையுடன் கையாள்கிறது. மாநாட்டின் இடையே ஹைதராபாத் இல்லத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஈரானிய அதிபர் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி 15 இருதரப்பு ஆலோசனைகளை நடத்தினார்.
2026 பிரிக்ஸ் மாநாட்டின் மூலம், ‘பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடு’ என்ற நிலையில் இருந்து ‘உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் நாடு’ என்ற நிலைக்கு இந்தியாவைப் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
உலக வல்லரசுகளை ஒரே மேடையில் அமர வைத்து, அமைதி மற்றும் வளர்ச்சி சார்ந்த ‘புதுடெல்லி பிரகடனத்தை’ உருவாக்கியது பிரதமர் மோடியின் முதிர்ச்சியடைந்த ராஜதந்திரத்துக்குச் சான்றாகும்.














