பணிக்கு பணம் பெற்ற சர்ச்சை: காங். கட்சி பொறுப்பில் இருந்து உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் விலகல்

0
17

தனது உதவியாளர் பணிக்கு பணம் பெற்ற சர்ச்சை குறித்த குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் விலகியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று ஹரிஷ் ராவத்தின் உதவியாளர் சந்தன் சிங் ஜீனாவின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2016-ல் நடைபெற்ற மாநில அளவிலான ஆட்தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் இந்த சோதனையை அமலாக்கத் துறை மேற்கொண்டது.

இது தொடர்பாக சந்தன் சிங் ஜீனா மற்றும் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் ரூ.32 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்கம், விலை உயர்ந்த 12 கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதோடு சந்தன் சிங் ஜீனா மற்றும் அவரது குடும்பத்தினர் இது அந்த மாநில அரசியலில் அதிர்வலைகளை எழுப்பியது.

தற்போது ஹரிஷ் ராவத்தின் உதவியாளராக சந்தன் சிங் ஜீனா உள்ளார். கடந்த 2014 முதல் 2017 வரையில் ஹரிஷ் ராவத் முதல்வராக இருந்தபோது, அவரது சிறப்பு பணி அதிகாரியாக சந்தன் சிங் ஜீனா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது குறித்து சமூக வலைதளத்தில் ஹரிஷ் ராவத் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “டேராடூனில் உள்ள எனது உதவியாளர் சந்தன் சிங் ஜீனாவின் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் உண்மை குறித்த விவரம் வரும் நாட்களில் வெளிவரும்.

அரசு மற்றும் கட்சி பொறுப்பில் நான் இருந்த போது முக்கிய பொறுப்புகளை அவர் கவனித்துள்ளார். அவர் கடின உழைப்பாளி. தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்க மாட்டார் என நம்புகிறேன். அதனால் அந்த குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை.

தேர்தல் குறித்து மக்கள் என்னிடம் கேட்பது உண்டு. சிபிஐ என் வீட்டு கதவை தட்டினால் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என நான் சொல்வது உண்டு. ஆனால், இந்த முறை எனது வீட்டுக்கு பதிலாக எனது உதவியாளர் ஒருவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இதன் மூலம் பொய் பிரச்சாரத்தை ஜோடிக்க முயல்கின்றனர்.

எங்களது கட்சி ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது. இது மாதிரியான சமயங்களில் இந்த வகையிலான குற்றச்சாட்டு கட்சியின் போராட்ட செயல்பாட்டை வலுவிழக்க செய்யும். அதனால் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளேன். எனது கட்சி பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன்” என்று ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here