பிரவீன் சித்ரவேலின் எழுச்சிமிகு பயணம் – விவசாயக் குடும்​பத்​தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!

0
14

ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்​பத்​திலிருந்து இன்று வெற்றிகரமான விளை​யாட்டு வீர​ராக மாறி​யிருக்​கிறார் இந்​திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்​சிமிகு வெற்​றிப் பயணம் இளைய தலை​முறைக்கு உத்​வேக​மான பாட​மாக மாறியுள்​ளது.

ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் நடை​பெற்று வரும் காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யின் டிரிப்​பிள் ஜம்ப்​பில் (மும்​முறைத் தாண்​டு​தல்) இந்​தி​யா​வின் சார்​பில் பங்​கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்​ளிப் பதக்​கத்தை வென்று இந்​திய தேசியக் கொடியை சர்​வ​தேச அரங்​கில் பறக்​க​விட்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தமிழகத்​தின் திரு​வாரூர் மன்​னார்​குடிக்கு அரு​கிலுள்ள செட்டிசத்​திரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர். ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்​பத்​தில் பிறந்த பிர​வீன் சித்​ர​வேல் இன்று சர்​வ​தேச விளையாட்டு அரங்​கில் ஜொலிக்​கும் நட்​சத்​திர​மாக மாறியுள்ளார். மேலும் இளம் தலை​முறை​யினருக்கு முன்​னு​தா​ரண​மாகத் திகழ்​கிறார்.

கிளாஸ்கோ காமன்​வெல்த் போட்​டி​யில் பதக்​கம் வென்​றது குறித்து பிர​வீன் சித்​ர​வேல் கூறிய​தாவது: கடந்த 2022-ல் நடை​பெற்ற காமன்​வெல்த் போட்​டி​யின்​போது 2 செ.மீ. வித்​தி​யாசத்​தில் பதக்க வாய்ப்பை இழந்​தேன். அது என்னை உறுத்​திக் கொண்டே இருந்​தது. இந்​த​முறை அதிதீ​விரப் பயிற்​சி​யுடன் களமிறங்​கினேன். திறம்பட செயல்​பட்டு வெள்​ளிப் பதக்​கத்தை வென்​றுள்​ளது மகிழ்ச்​சி. நான் மிக​வும் ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்பத்திலிருந்து விளை​யாட்​டுத் துறைக்கு வந்​தேன். எனது தந்தை சித்​ர​வேல், விவ​சாய தினக்​கூலி தொழிலா​ளி.

என்னை மிக​வும் கஷ்டப்​பட்டு படிக்க வைத்​து, விளையாட்டுத்துறைக்கு அனுப்​பி​னார். கிளாஸ்கோ போட்​டி​யின்​போது நான் அதிக அழுத்​தத்தை மனதில் ஏற்​றிக்​கொள்​ள​வில்​லை. கிளாஸ்​கோ​வில் கடும் குளிர் நில​வியது. உடலை அசைப்​பதே கடின​மாக இருந்​தது. இருப்​பினும் என்​னுடைய சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்த வேண்​டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். அதன்​படியே செயல்​பட்டு பதக்​கத்​தைக் கைப்​பற்​றினேன்.

தற்​போது என்​னுடைய அடுத்த இலக்கு ஜப்​பானில் செப்​டம்​பர் 19 முதல் அக்​டோபர் 4-ம் தேதி வரை நடை​பெறவுள்ள ஆசிய விளையாட்​டுப் போட்​டி​தான். இந்​தப் போட்​டி​யில் பதக்​கம் வெல்​ல​வேண்​டும் என்​ப​தற்​காக பயிற்சி எடுத்து வரு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பிர​வீனின் தந்தை சித்​ர​வேல் கூறும்​போது, “நான் ஒரு விவ​சாய தினக்​கூலித் தொழிலா​ளி. ஆரம்ப காலத்​தில் மிக​வும் கஷ்டப்பட்டோம். பயிற்சி நாட்​களில் நான் எனது மகனை என் மிதிவண்​டி​யில் அழைத்​துச் செல்​வேன். சிறிது சிறி​தாக முன்​னேறி இன்று சர்​வ​தேச அளவில் பதக்​கம் வெல்​லும் நிலைக்கு அவர் சென்​றுள்​ளார்.

கிளாஸ்​கோ​வில் தங்​கப் பதக்​கத்தை நூலிழை​யில் அவர் தவறவிட்டார். அடுத்த முறை, என் மகன் நிச்​சய​மாக தங்​கப் பதக்கத்தை வென்று இந்​தி​யா​வுக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் பெரிய அளவில் பெரு​மை​யைக் கொண்டு வரு​வார்” என்​றார்.

இதே டிரிப்​பிள் ஜம்ப் பிரி​வில் தமிழகத்​தைச் சேர்ந்த செல்​வப்​பிரபு திரு​மாறன் 3-வது இடம் பிடித்து வெண்​கலத்​தைக் கைப்​பற்றி பெருமை சேர்த்​துள்​ளார்.

செல்​வப்​பிரபு கூறும்​போது, “போட்​டி​யில் வெண்​கலம் வென்​றது மிக​வும் மகிழ்ச்​சி. இந்த நேரத்​தில் எனது பெற்​றோரைப் பற்​றி​யும் என்​னைப் பற்​றி​யும் நான் மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன்.

போட்​டி​யில் பதக்​கம் வெல்​வது ஆரம்​பத்​திலிருந்தே அவர்​களின் கனவாக இருந்​தது. நான் இந்​தி​யா​வைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்த வேண்​டும் என்று எனது பெற்​றோர் விரும்​பினர். நான் பதக்​கத்தை விட, எனது ஆட்​டத்​திறனிலேயே அதிக கவனம் செலுத்​தினேன். இந்​தி​யா​வுக்​காகப் பதக்​கம் வெல்​வது ஒரு சிறந்த விஷ​யம்.

எனது பதக்​கத்​தை, எனது பயணத்​தில் ஆதர​வளித்​தவர்​கள், எனது பயிற்​சி​யாளர்​கள், உடலியக்க நிபுணர்​கள், சக வீரர்​கள், நண்பர்கள் மற்​றும் குடும்​பத்​தினர் என அனை​வருக்​கும் அர்ப்​பணிக்​கிறேன்​. அவர்​களே எப்​போதும்​ எனக்​குத்​ துணை​யாக​வும்​ பலமாகவும்​ இருக்​கின்​றனர்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here