இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்றுமுன்தினம் இரவு சவுத்தாம்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் விளாசினார். சர்வதேச டி 20 அரங்கில் ஹாரி புரூக்கின் 2-வது சதமாக இது அமைந்தது. தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் சேர்த்தார்.
255 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 33, தசன் ஷனகா 24 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சோனி பேகர் 3 விக்கெட்களையும் லியாம் டாவ்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி கார்டிஃப் நகரில் இன்று நடைபெறுகிறது.














