பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

0
24

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மிண்டானாவ் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியின் புவி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.3-ல் இருந்து 8.2 என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அது 7.8 என்பதை ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்தது.

இதையடுத்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் சர்வதேச முகமைகள் சில சுனாமி எச்சரிக்கை விடுத்தன. கடலோரம் வசிக்கும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் வழக்கமான கடல் அலைகளின் உயரத்தை காட்டிலும் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தைவான், ஜப்பான், குவாம், பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான அலைகள் எழலாம் என தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்த மக்கள் விரைந்து வெளியேறினர். நிலநடுக்கம் உணரப்பட்ட இடத்தில் வீடுகள் மற்றும் அலுவலகம், வணிக கட்டிடங்களில் இருந்த தொலைக்காட்சி, நாற்காலி, மேசை உள்ளிட்ட சாமான்கள் விழுந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தச் சூழலில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அறிய அதிகாரிகள் களப்பணி மேற்கொண்டுள்ளனர். இதில் யாரேனும் காயமடைந்து உள்ளார்களா, கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. அதில் வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுவதும், சாலை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் உள்ள சிக்னல் விளக்குகள் குலுங்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில் கடலோர பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர செய்வதை அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here