பாண்டிங் சுதந்திரம் தருகிறார்: சொல்கிறார் ஸ்ரேயஸ் ஐயர்

0
299

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப்பின் தகுதி சுற்று 1-ல் விளையாட தகுதி பெற்றது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 185 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 9 பந்துகளை மீதம் வைத்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில், 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஷ் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

போட்டி முடிவடைந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது,“ கடந்த சில வருடங்களாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கும் எனக்கும் இடையே நட்புறவு இருந்து வருகிறது, அவர் எனக்கு நிறைய சுதந்திரம் தருகிறார். என்னை களத்தில் தீர்க்கமாக இருக்க அனுமதிக்கிறார், இவை அனைத்தும் சிறந்த முறையில் உச்சத்தை அடைந்துள்ளன.

அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சரியான நேரத்தில் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். முதல் ஆட்டத்தில் இருந்து, சூழ்நிலை எதுவாக இருந்தபோதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் இருந்தோம். சரிவில் இருந்தாலும் கைகொடுத்து தூக்கக்கூடிய வீரர்களை நாங்கள் அணியில் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருந்து உதவி பயிற்சியாளர்கள், நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ரிக்கி பாண்டிங் வீரர்கள் மேலாண்மையில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். இதில் எனது நம்பிக்கையைப் பெறுவதும் முக்கியம். ஆரம்பத்திலேயே வெற்றிகளைப் பெற்றபோது அது நடந்தது. நீங்கள் நல்ல உறவுகளைப் பேண வேண்டும். வீரர்களின் ஓய்வறை சிறந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தை தொடங்கிய விதம் அற்புதமானது, இளம் வீரர்கள் அச்சமற்றவர்கள். அவர்கள் வலைபயிற்சியில் கடினமாக உழைப்பது மைதானத்தில் வெளிப்படுகிறது.

ஜோஷ் இங்லிஸ் பேட்டிங் வரிசை மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறது. அவர், புதிய பந்தில் விளையாடுவதை விரும்புவதால், அதிக பந்துகளை விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். அது அற்புதங்களைச் செய்தது. ஜோஷ் இங்லிஷ் அபாயகரமானவர், சிறந்த அணுகுமுறை கொண்டவர் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here