‘உங்களைப் போன்றவர்கள்…’- அயர்லாந்தில் இனவெறி அவமதிப்புக்கு ஆளான சங்ககாரா அதிர்ச்சி

0
29

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான குமார் சங்ககாரா, அயர்லாந்தின் டப்ளினில் தானும் தனது குடும்பத்தினரும் இனவெறி மற்றும் பாகுபாடு காட்டும் வகையிலான அவமதிப்பு நடத்தையை எதிர்கொண்டதாக வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டப்ளினில் உள்ள ரியான் ஏர் விமான நிறுவனத்தின் கேட் பணியாளர்கள் தன்னிடமும் தனது குடும்பத்தினரிடமும் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாக சங்ககாரா தெரிவித்துள்ளார்.

“டப்ளினில் ரியான் ஏர் நிறுவனத்தின் பாகுபாடு காட்டும் கேட் பணியாளர்களை யாராவது எதிர்கொண்டிருக்கிறீர்களா? நானும் எனது குடும்பத்தினரும் இப்போதுதான் அத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டோம். அவர்கள் பேசிய விதம், நடைமுறைகளை கையாண்ட விதம் மற்றும் மிரட்டும் தொனியில் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியளித்தது. எந்தப் பயணியிடமும் இப்படிச் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. டப்ளினில் எனக்கு ஏற்பட்ட முதல் மோசமான அனுபவம் இது” என்று சங்கக்காரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு டப்ளினைச் சேர்ந்த ஒரு பெண் பயனர், சங்ககாராவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பதிலளித்தார். “அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது பாகுபாடு அல்ல. ஒருவரின் அந்தஸ்தை அங்கீகரிக்காமல் நடுநிலையாக நடத்துவது பாகுபாடு கிடையாது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து சங்ககாரா விரிவாக விளக்கம் அளித்தார். அப்போது விமான நிறுவன ஊழியர்கள், “உங்களைப் போன்றவர்கள், உங்களைப் போன்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட நடத்தையை எதிர்பார்க்க வேண்டும்” என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அந்தக் கருத்துக்கு எதிராக தாங்கள் கேள்வி எழுப்பினால், மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு விமானத்தில் ஏற்றப்படாமல் போகலாம் என்றும் ஊழியர்கள் எச்சரித்ததாக சங்ககாரா கூறினார்.

“உங்களைப் போன்றவர்கள், உங்களைப் போன்ற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட நடத்தையை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த அருவருப்பான கருத்துக்கு எதிராக நாங்கள் கேள்வி எழுப்பினால், மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. இது அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல; இது இனவெறி” என்று சங்ககாரா பதிலளித்தார்.

சங்ககாராவின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, விளையாட்டு உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரபல பத்திரிகையாளர் பியர்ஸ் மோர்கனும் சங்கக்காராவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

சங்கக்காரா மிகவும் கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய மனிதர் என்றும், அவர் பொதுவெளியில் விமான நிறுவனத்தின் நடத்தையை விமர்சிக்கும் அளவுக்கு சம்பவம் நடந்திருந்தால் அது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் பியர்ஸ் மோர்கன் தெரிவித்துள்ளார்.

சங்ககாராவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரியான் ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதில் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here