வங்கதேசம் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 74 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. ஷத்மான் இஸ்லாம் 99, லிட்டன் தாஸ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 97.4 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 3-வது சதத்தை விளாசிய ஷத்மான் இஸ்லாம் 105 ரன்களில் அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் விரைவாக நடையை கட்டினர். லிட்டன் தாஸ் 34 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஜோமல் வாரிக்கன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமர் ஜோசப், ஜோஸ்வா பிஷப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
ஜான் கேம்பல் 54, பிரண்டன் கிங் 15, கவேம் ஹாட்ஜ் 7, அமிர் ஜாங்கூ 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேக்நரைன் சந்தர்பால் 43, ஜஸ்டின் கிரீவ்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.














