டிசம்பரில் பிரதமர் மோடி கனடா பயணம்: மார்க் கார்னி தகவல்

0
15

எதிர்வரும் டிசம்பர் மாதம் பிரதமர் மோடி தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா – இந்தியா இடையிலான வர்த்தக உறவு மற்றும் பிரதமர் மோடி எப்போது கனடா வருகிறார்? என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் சபை 81-வது பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள மார்க் கார்னியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

“இந்தியாவுடனான வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். ஏனெனில், மக்களுக்கு மக்கள், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் என பல்வேறு நிலைகளில் இந்த உறவு எங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

கடந்த ஜி20 மாநாட்டில் இது குறித்து நானும், பிரதமர் மோடியும் பேசி இருந்தோம். எதிர்வரும் ஜி20 மாநாட்டில் இதில் உடன்படிக்கை எட்டப்படும். இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாடு வரும் டிசம்பரில் நடைபெற உள்ளதாக தகவல். அதற்கான பயணத்தின் போது பிரதமர் மோடி, கனடாவுக்கு வருகை தர உள்ளார். அதன் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளேன்” என்று மார்க் கார்னி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்க் கார்னி அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கனடா சென்றிருந்தார். கடந்த மார்ச் 2025-ல் கனடா பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றிருந்தார். அவர் பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில், டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து, பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here