பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரூ.14,000 கோடிக்கும் அதிகமான பிஎன்பி வங்கி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் நீரவ் மோடி முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, அவர் அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரிட்டனில் அனைத்து சட்ட வழிகளும் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நீரவ் மோடி பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்றும், இந்திய சிறைச்சாலைகளின் தரம் மோசமாக இருப்பதாகவும் நீரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்து. இதையடுத்து, நீரவ் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் நீரவ் மோடி இந்தியாவுக்குக் அழைத்து வரப்படலாம் என்று கூறப்படுகிறது.















