வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுக்கு சேவை செய்வதற்காக ரூ.20 கோடி மதிப்பில் 4 கவச கார்களை மெர்சிடிஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின்போது அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது மிக முக்கியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 4 கவச மெர்சிடிஸ் கார்களை ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்க உள்ளது. இதற்காக, 2.2 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி செலவில் இந்த 4 கவச கார்கள் வாங்கப்பட உள்ளன.
வெளிநாட்டு தலைவர்கள், விவிஐபிக்களின் வருகையின் போது துப்பாக்கி குண்டுகள்துளைக்காத பிரத்யேகமானஇந்த கார்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும். வெளிநாட்டு பிரமுகர்களின் வருகையை ஏற்பாடு செய்யும் வெளியுறவு அமைச்சகம் 4 கவச கார்களின் இறக்குமதிக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்யவேண்டும் என நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முற்றிலும் கட்டமைக்கப்பட்ட ஒரு காரின் இறக்குமதிக்கான சுங்கவரி அதன் இறக்குமதி மதிப்பில் 100 சதவீதம் ஆகும். இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் நான்கு மெர்சிடிஸ் கார்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடியாக இருக்கும்பட்சத்தில், சுங்க வரியுடன் சேர்த்து அவற்றின் மொத்த விலை ரூ.40 கோடியாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.