முடங்கிய இல்லம் தேடி கல்வி திட்டம்: முறையான அறிவிப்பு வராததால் குழப்பம்

0
131

முறையான அறிவிப்பு வராததால், தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ செயல்படாமல் முடங்கியுள்ளது.

தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.

கரோனா காலகட்டத்தில் இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும், கடந்த மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் நடக்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களில் சிலர், ஸ்மார்ட் வகுப்புகள், உயர்தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர்களாக அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முறையான அறிவிப்பு இல்லாததால், இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை என்றனர்.